நாடாளுமன்றத்தில் நேற்று ராகுல் காந்தி ஆற்றிய உரை, மத்தி்ய அரசு மீதான துல்லிய தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்று பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் கடந்த 27ம் தேதி 18வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. எம்பிக்கள் பதவியேற்றதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியிருந்தார். குடியரசுத் தலைவரின் உரையின்போது மணிப்பூர், நீட், அக்னிபாத் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியிருந்தனர். இதனையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதங்கள் தொடங்கின. நேற்று இந்த விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எதிர்க்கட்சி தலைவராக ராகுல் உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பதால் அவர் பேசிய விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
இவரது பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டும் என்று பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார். இது குறித்த தனது எக்ஸ் தளத்தில், “எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில் ராகுல் காந்தி ஜி தெரிவித்துள்ள அனைத்து பொறுப்பற்ற கருத்துகளுக்கு மத்தியில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஒரு ராகுல் அல்ல, இருவராக உள்ளேன். அதில் ஒருவர் அரசமைப்புக்காக வாழ்ந்து வருவதாகவும், மற்றொரு ராகுல் மடிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது வேடிக்கையான விஷயமல்ல. ராகுல் ஜி உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திலிருந்தும், தாயாரிடமிருந்தும் வரும் அழுத்தங்களால், நீங்கள் யாராக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதைவிடுத்து வேறொருவராக இருக்க நேரிடுவதால் இதுபோன்ற அடையாளச் சிக்கல்கள் ஒருவருக்கு உண்டாகும். இதனை பெரும்பாலான மனநல ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ராகுல் ஜியின் பேச்சில் ஏராளமான சிக்கல்களும் வலிகளும் உள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராகுல் பேசும்போதும், தன்னால் இருவேறு நபர்களைக் காண முடிவதாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற கருத்துகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் இதுபோன்ற நடத்தைகள் குறித்த மனநலனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.