மக்களவை கூட்டத்தொடரில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். நீங்கள் மைனாரிட்டி என்பதை இன்னும் உணரவில்லை என்று பேசினார்.
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் நேற்று அனல் பறந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சந்தித்த பின்னடைவு, கைவிட்ட ராம ஜென்ம பூமி வியூகம், பாஜக மட்டுமே இந்துக்களின் பிரதிநிதிகள் அல்ல என அடுக்கடுக்காக பேசினார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் உள்ளிட்டோர் மாறி மாறி பதிலடி கொடுத்தனர்.
பின்னர் பேசத் தொடங்கிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மஹுவா மொய்த்ரா, கடைசியாக இங்கே நான் நிற்கும் போது என்னை பேச அனுமதிக்கவில்லை. 2019 ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் என்னுடைய முதல் பேச்சில் பாசிசத்தின் 7 முகங்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டிருந்தேன்.
2024 ஜூனில் புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசின் முதல் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது கையில் செங்கோல் அளித்து வரவேற்கப்பட்டது. மன்னராட்சியின் அடையாளமாக திகழும் செங்கோலிற்கு இந்த ஜனநாயக மன்றத்தில் என்ன வேலை?
303 உறுப்பினர்கள் உடன் அசுர பலத்துடன் இருந்த பாஜக தற்போது 240 உறுப்பினர்கள் உடன் மைனாரிட்டி ஆக சறுக்கியிருக்கிறது. நீங்கள் மைனாரிட்டி என்பதை இன்னும் உணரவில்லை. ஆனால் குடியரசு தலைவரின் உரையில் என்ன இருந்தது? இந்த நாட்டு மக்கள் கிளியர் மெஜாரிட்டி உடன் அரசை தேர்வு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பழைய உரைகளை கட் அண்ட் பேஸ்ட் செய்து குடியரசு தலைவர் மாளிகையை அவமானப்படுத்தாதீர்கள். இம்முறை எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கிறோம். நெருப்பாற்றில் நீந்தி வந்த எங்களை நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்