மணிப்பூரில் வன்முறைகள் குறைந்துவிட்டன; பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன; முழுமையான அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி வரை நடைபெற்றது. ஜூன் 27-ந் தேதியன்று லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்து உரையாற்றினார். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். இன்றும் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசிய போது எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் வெளிநடப்பும் செய்தனர். இத்தகைய அமளிகளுக்கு நடுவே பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. அம்மாநிலத்தில் முழுமையான அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து கூட்டாக அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரிலேயே சில வாரங்கள் முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல மணிப்பூரில் வன்முறைகளை தூண்டுவோரை நான் கடுமையாக எச்சரிக்கிறேன். மணிப்பூரில் கடந்த காலத்தில் 10 முறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது முந்தைய காங்கிரஸ் அரசுதான். அரசியலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் இணைந்து முயற்சிப்போம். 140 கோடி மக்கள் லோக்சபா தேர்தலில் கொடுத்த தீர்ப்பை ஏற்க முடியாமல் தவிக்கின்றன எதிர்க்கட்சிகள். லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.