முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணையச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை நிகழ்வின் போது தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்தவதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்திய நாடாளுமன்றத்திலும் நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இது தொடர்பாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா மற்றும் தமிழக எம்பிக்கள் பலரும் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள், மாணவரணி நிர்வாகிகள், கல்வியாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில்; நீட் தேர்வால் பலனடைந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு AK ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்?
முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா? இவ்வாறு அவர் எழுப்பியுள்ளார்.