வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களை ஒடுக்கும் தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வீடுகளில் கருப்புக் கொடி, கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், பள்ளிகள் புறக்கணிப்பு, தொடர் உண்ணாவிரதம் என பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பரந்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முன்வராத தி.மு.க. அரசு, அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது பரந்தூர் பகுதி விவசாய மக்களுக்கு தி.மு.க. அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தங்களின் வாழ்வாதார உரிமைகளை காக்க போராடுபவர்களை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.