திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்ற முயன்றதால் மனம் உடைந்த இளைஞர் தீக்குளித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். குறிப்பாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் வசிப்பவர் ராஜ்குமார். ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி இவரது வீட்டை இடிக்க அதிகாரிகள் அண்மையில் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், ராஜ்குமாரின் வீட்டை இடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்கள். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமிப்புகளை வருவாய்துறை அதிகாரிகள் அகற்றி கொண்டிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார் தனது வீடு பட்டா நிலத்தில் தான் உள்ளதாக கூறினார். ஆனாலும் வீட்டை இடிக்க அதிகாரிகள் முயன்றார்களாம். இதனால் மனம் உடைந்த ராஜ்குமார் வீட்டிற்குள் இருந்தபடி, மண்ணெணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தவாறு வெளியே ஓடிவந்தார். அங்கிருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தீப்பிடித்து எரிந்தவாறு ராஜ்குமார் அங்கும் இங்கும் ஓடினார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு ராஜ்குமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தார்கள். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது ராஜ்குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடலில் தீ பற்றி எரியும் நிலையில், இளைஞர் ஓடும் பரபரப்பு காட்சி சக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்திற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்த திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், சலுகைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில், சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்களாக இடிக்கப்படுகின்றன. சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்க விடாமல் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளார். ஆனால் மாநில வீட்டு வசதித்துறை அமைச்சரும், மாநில மதுவிலக்கு துறை அமைச்சருமான முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் இந்த திமுக அரசின் முன்னுரிமைகள் பற்றி நிறைய பேசுகிறார். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.