அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடிப்படை மனித உரிமையை மறுத்து, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல், தன்னிச்சையாகப் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப் படுத்தியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும்.
அதிலும் இந்தியத் தண்டனைச் சட்டத்தை (ஐபிசி) பாரதிய நியாய சங்கிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை(சிஆர்பிசி) பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கிதா எனவும், இந்திய ஆதாரச் சட்டத்தை (ஐஇ) பாரதிய சாக்ஷிய அதினியம் எனவும் பாஜக அரசு சம்ஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது.
குறிப்பாக தேசத்துரோகக் குற்றச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக, ‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்குத் தீங்கு விளைவிப்பது’ என்ற பொருள் படும்படியான வார்த்தைகளில் புதிய குற்றச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு தனக்கு எதிராக யார் பேசினாலும் அதை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என திசைதிருப்பி கருத்துச் சுதந்திரத்தை எளிதாக நசுக்க முடியும். போராட்டங்களை அடக்கி ஒடுக்க முடியும்.
மேலும், புதிய சட்டங்கள் மூலம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் அவர்களை அங்கீகரிக்கப்பட்ட கூலிப்படையாக்கியுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.