இளைஞர்களின் கல்விக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் மரணம், மிகப்பெரிய பேரிழப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங். நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் போல சீருடையில் வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் சரணடைந்தனர். எனினும், அவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வேதனை தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலைகள் மலினமாகி இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் – வேதனையும் அடைந்தேன். அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும். இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் – குடும்பத்தினர் – நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.