புதிய குற்றவியல் சட்டத்தில் பல முரண்கள்: ப. சிதம்பரம்!

நமது நாட்டில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. இருப்பினும், இதில் பல குறைபாடுகள் இருப்பதாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், இதில் உள்ள குறைபாடுகள் குறித்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் சொல்ல மறுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வந்தன. இருப்பினும், இதில் பல குறைகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கிடையே ப. சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு இது தொடர்பாக விரிவான பேட்டியை அளித்துள்ளார். அதில் சட்டத்தில் பல குறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். ப. சிதம்பரம் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்தி பெயரை வைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் அதை இந்தி வெர்ஷனில் மட்டும் இந்தி பெயரை வைக்கலாம்.. ஆங்கிலப் பதிப்பிற்கு ஏன் இந்தி பெயரை வைக்கிறீர்கள்? இந்த சட்டங்கள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.. இப்போது இதை எப்படி மொழிபெயர்ப்பது? இதை தமிழில் ‘இந்திய குற்ற சட்டம்’ என அழைக்க வேண்டுமா அல்லது ‘பாரதிய நியாய சன்ஹிதா’ என்று அழைக்க வேண்டுமா.. இதற்கு பதில் இல்லை. இந்தி வெர்ஷனுக்கு, இந்தி பெயரை வையுங்கள்.. யாரும் எதுவும் சொல்ல போவது இல்லை.. ஆனால், ஆங்கில வெர்ஷனுக்கு ஒரு ஆங்கில பெயரை தான் வைக்க வேண்டும். தமிழ் வெர்ஷனுக்கு நீங்கள் கன்னட மொழியில் பெயரை வைப்பீர்களா?” என்றார்.

புதிய சட்டங்கள் அவசியமில்லை என்று கூறியிருந்தீர்கள்.. அது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “சட்டங்களில் தேவையில்லாத மாற்றங்களைச் செய்யக்கூடாது. தேவை என்றால் மட்டுமே சட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும். ஏனென்றால் சட்டம் ஸ்திரத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை (CrPC) எடுத்துக் கொள்ளுங்கள். அது 1973இல் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் நீங்கள் அதை மாற்றி எழுதுகிறீர்கள் என்றால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நீங்கள் அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளீர்கள்.. ஐபிசி, குற்றவியல் நடைமுறை சட்டம் என அனைத்தையும் அப்படியே நகலெடுத்துள்ளீர்கள். புதிய சட்டங்கள் ஐபிசி-இல் 90-95% நகலெடுக்கப்பட்டுள்ளது.. CrPCஇல் இருந்து 95% நகலெடுக்கப்பட்டு இருக்கிறது. நான் சொல்வதை உண்மை இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. இதை நான் சவாலாகவே விடுக்கிறேன்” என்றார்.

புதிய சட்டங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என்பதற்கு அவர், “தேச துரோக சட்டம் நீக்கப்பட்டிருக்க வேண்டும். புதிய சட்டத்தில் கிட்டதட்ட அதே சட்டம் இருக்கிறது. மரண தண்டனையை ரத்து செய்திருக்க வேண்டும். மாறாக, தனிமைச் சிறை என்ற மற்றொரு வழக்கத்திற்கு மாறான தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளனர். சமூக சேவை என்றால் என்ன என்பதை வரையறுத்து இருக்க வேண்டும். அதை வரையறுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு நீதிபதியும் சமூக சேவைக்கு ஒவ்வொரு வரையறை சொல்வார்கள்.. உதாரணமாக, புனே கார் விபத்தில் விபத்தை ஏற்படுத்தியவர் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றார்கள். இது சமூக சேவையா? இந்தியா போன்ற பெரிய நாட்டில் சமூக சேவை என்றால் என்ன என்பதை வரையறுத்திருக்க வேண்டும். அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உண்மையில் நன்மை பயக்கும் சேவையாக இருக்க வேண்டும்” என்றார்.

இப்போது சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இதில் என்ன சிக்கலை பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், “அரசு ஒரு அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. சட்டங்கள் எப்போது அமலுக்கு வரும் என்பது அவை substantive (குற்றங்களைக் கையாள்வது தொடர்பானது) அல்லது procedural (நீதிமன்றச் செயல்முறை) என்பதைப் பொறுத்து மாறுபடும். ஆனால் சில சட்டங்கள் உதாரணனமாக CrPC மற்றும் எவிடன்ஸ் ஆக்ட் போன்றவை இந்த இரண்டு பிரிவின் கீழும் வரும். எனவே, எவை எல்லாம் ஜூலை 1 (சட்டங்கள் நடைமுறைக்கு வந்த தேதி) பின் நடந்த வழக்குகளுக்கு மட்டும் பொருந்தும். எவை எல்லாம் அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதாவது ஜூலை 1க்கு முன் நடந்த குற்ற சம்பவங்களுக்கு புதிய சட்டம் பொருந்தாது. குற்றம் நடந்த தேதியில் நடைமுறையில் இருந்த சட்டம் மட்டுமே பொருந்தும். ஜூன் 31 வரை நடந்த குற்றங்களுக்கு புதிய சட்டங்களை பயன்படுத்த முடியாது என்பதை சட்டப்பிரிவு 20 தெளிவாக சொல்கிறது. ஆனால் CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் குறித்து இதுபோல விதி இல்லை. எனவே, இதை அரசு சட்டத்திலேயே தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். மேலும், ஐபிசி இரண்டு வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது, ஒன்று குற்றங்கள் மற்றும் மற்றொன்று மோசமான குற்ற வடிவங்கள். Organised crime என்பவை மிக மோசமான குற்றங்கள்.. அதற்கு சிறப்பு வரையறை, தனி தண்டனை இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், பயங்கரவாதத்திற்கு உபா, அரசியல்வாதிகள் மீதான புகார்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இருக்கும் போது அதை வழக்கமான சட்டத்தில் சேர்ப்பது தேவையில்லாத குழப்பத்தையே ஏற்படுத்தும். இவை நீதிபதிகளுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும்” என்றார்.

தேவையற்ற கைதுகளை தடுப்பது குறித்து புதிய சட்டங்களில் பேசப்பட்டு இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு ப.சி, “முதலில் ஒருவரை தேவையில்லாமல் கைது செய்ய கூடாது. இப்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கே நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது. மேலும் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறது. குறிப்பாக கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் ஒரு தீர்ப்பில் கூறியிருந்தார். மேலும், கைது செய்ய நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய வேண்டும். கைது சட்டப்பூர்வமானதா? அவசியமா? என்பதை மாஜிஸ்திரேட் கேட்க வேண்டும். இந்தியாவில் உள்ள கைதிகளில் 66 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் ஏன் மக்களை சிறையில் தள்ளுகிறோம்? ஆதார் இருக்கும்போது, டிஜிட்டல் கண்காணிப்பு இருக்கும் போது சிறையில் ஏன் தள்ள வேண்டும்? விசாரணையில் இருக்கும் நபர் மீது மின்னணு சாதனம் இணைத்து அவரை கண்காணிக்கலாமே.. மக்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும்? பெரும்பாலான வழக்குகள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகிறார்கள் என்பதால் விசாரணைக்கு முன்பே தண்டிக்கிறார்கள. இது சரியான நடைமுறை இல்லை” என்றார்.

மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் இந்த ஜாமீன் கட்டுப்பாடு யுபிஏ ஆட்சியில் தானே நடைமுறைக்கு வந்தது என்ற கேள்விக்கு அவர், “இல்லை.. இந்த சட்டம் 2002இல் நிறைவேற்றப்பட்டது.. 2002ல் ஆட்சியில் இருந்தவர் யார்? அடல் பிஹாரி வாஜ்பாய்.. அது ஜனவரி 17, 2003இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. அப்போது பிரதமர் யார்? வாஜ்பாய். அதன் பிறகு 2004இல் ஆட்சி மாற்றம் நடந்தது. நிதி நடவடிக்கை பணிக்குழு (சர்வதேச அமைப்பு) எங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இதனால் வேறு வழியில்லாமல் இதை அறிவித்தோம். அப்போதும் இதில் இரு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தோம்” என்றார்.

புதிய குற்றவியல் சட்டங்களில் ஜாமீனுக்கு மேலும் கட்டுப்பாடுகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், “அனுபவம் இல்லாத நபர்கள் இந்த புதிய சட்டங்களை இயற்றியதே இதற்குக் காரணம். இதை உருவாக்கியவர்கள் பார்ட் டைமில் இக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். இது சட்ட ஆணையம் வழியாக சென்றிருக்க வேண்டும். ஏனென்றால் சட்ட ஆணையம் அனுபவமுள்ளவர்களைக் கொண்டுள்ளது.. சட்டத்தில் முரண்களை அவர்கள் கண்டறிந்திருப்பார்கள். நமது நாட்டில் எந்த முக்கிய சட்டமும் சட்ட ஆணையத்திற்கு அனுப்பப்படாமல் நிறைவேற்றப்பட்டதே இல்லை” என்றார்.