ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் நோக்கம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகே நின்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனங்களில் அங்கு கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்படை போலீஸார் அருள் (33), செல்வராஜ் (48), மணிவண்ணன் (25), திருமலா (45), பொன்னை பாலு (39), ராமு (38), சந்தோஷ் (32), திருவேங்கடம் (33), ஆகிய 8 பேரை கைது செய்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததா என்பது பற்றி விசாரிக்கப்படு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அடையாளம் தெரியாத சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர் என போலீஸுக்கு தகவல் வந்தது. தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக சென்று ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனை கொண்டு சென்றனர். கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளோம். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் பாதுகாப்பு. கொலை பின்னணி பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. சிலர் மீது சந்தேகம் இருக்கிறது. ஆற்காடு சுரேஷ் சிறையில் இருந்தபோது சில சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்களை மட்டுமே தற்போது கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.