“ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரேமலதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து இது போன்ற படுகொலை சம்பவங்கள் நடந்து வருவது அனைவரின் மத்தியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை என்ற செய்திகள் தொடர்ந்து வருவது தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சி.
குண்டர்களால் வெட்டி சாய்க்கப்படுகின்ற அளவுக்கு காலச்சார சீரழிவு ஏற்பட்டு இருக்கின்றது. இது அத்தனைக்கும் காரணம் சட்ட ஒழுங்கு சீர்கேடும். கஞ்சா, டாஸ்மாக், கள்ளச்சாராயம், போன்ற போதை பொருள்களின் உபயோகம் அதிகமாக இருப்பதனால் தான் இது போன்று தொடர்த்து படுகொலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த படுகொலை செய்தவர்கள் யார் என்பதையும் எதற்காக படுகொலை செய்தனர் என்பதை தமிழக அரசு காவல்துறை மூலம் கொலைக்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் அந்த கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனது இயக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் இன மக்களுக்கும் உழைத்து கொண்டு இருந்த அவரின் மறைவு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் அந்த கழகத்தை சேர்ந்த தொண்டர்களுக்கும் அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும். நண்பர்களுக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.