அண்ணாமலைதான் துரோகி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து இருந்தன. ஆனால், அண்ணாமலை மீது குற்றம்சாட்டி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித் தனியாக போட்டியிட்ட நிலையில், ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தோல்விக்கு காரணம் கூட்டணி அமைக்காததுதான் என இரு கட்சிகளின் தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுகவில் சுய லாபத்துக்காக செய்யும் அரசியலால் அக்கட்சி அழிந்துகொண்டு உள்ளது என்றும், நம்பிக்கை துரோகி என்று ஒருவரை சொல்ல வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குதான் அது பொருந்தும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தனக்கு அருகில் அமர வைத்தார். ஆனால், அவர் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார் என்றெல்லாம் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த சூழலில் மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி போல பேசக்கூடியவர் அண்ணாமலை. நான் துரோகி கிடையாது. துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலைதான். ஏனெனில் நான் பிரதமரின் பக்கத்தில் அமர்ந்து பிறகு துரோகம் செய்துவிட்டேன் என்று கூறுகிறார். பிரதமரின் அருகில் அமர்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகு நடந்தது என்ன? எங்கள் கட்சியின் பெயரே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். அண்ணா விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். அப்படிப்பட்ட எங்கள் தலைவர்களை அவதூறாக, கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
பக்கத்தில் உட்கார்ந்துவிட்டு சென்றதற்கே உனக்கு அவ்வளவு துடிக்குதே.. எங்களை ஆளாக்கிய தலைவர்களை பேசினால் எங்களுக்கு எவ்வளவு உள்ளக் குமுறல் வரும். நாங்கள் உணர்ச்சியுள்ள மனிதர்கள் தான்.. யாருக்கும் அடிமை கிடையாது. அண்ணாமலை கட்சித் தலைவர் பதவிக்கே பொருத்தம் இல்லாதவர். நாங்கள் 50 ஆண்டுகாலம் உழைத்த பிறகுதான் தலைவர் பதவிக்கு வந்துள்ளோம். அண்ணாமலை போல அப்பாயின்மெண்ட் பதவி கிடையாது.
சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று புள்ளிவிவரத்துடன் பேசி உள்ளேன். திமுக ஆட்சியில் தமிழக முழுவதும் அனைத்து குற்றங்களும் நடந்த வண்ணம் உள்ளது. அண்மை காலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார், திமுக அரசு விசாரணை நடப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு சேலம் மாநகரத்தில் முன்னாள் மண்டல குழு தலைவர் சண்முகத்தை கொடூரமான முறையில் கொலை செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. முதல்வர் தொகுதியிலேயே தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கின்ற சூழ்நிலையை தான் பார்க்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் சென்று விட்டது. மக்களுக்கு அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுவது நாட்டு மக்களுக்கு தெரிகிறது. காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகின்ற சூழல் இல்லை சர்வ சாதாரணமாக கொலை நடைபெறுகிறது. ஆட்டை வெட்டுவதைப் போல் ரவுடிகள் வெட்டி சாய்ப்பதை நாம் பார்க்கிறோம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொருத்தவரை எங்கள் தலைமை முடிவு தான். அம்மா இருக்கும்போது ஐந்து இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளோம் கருணாநிதியும் ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார். ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பது நாடறிந்தது. 30க்கும் மேற்பட்ட இடத்தில் வாக்காளரை அழைத்துச் சென்று பட்டியில் அடைத்து வைத்தார்கள். ஜனநாயக படுகொலை அரங்கேறியது. விக்கிரவாண்டியின் ஒரு வீட்டில் இருந்து சட்டைகள் வேஷ்டிகள் எல்லாம் நமது சாலையில் போடுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயகம் செத்துவிடும். தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும்.. யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
ஓபிஎஸ் நினைக்கலாம்.. ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் விஸ்வாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. அம்மாவுக்கு இருந்தபோது வெண்ணிறாடை நிர்மலா எதிர்த்து போட்டியிட்டதற்கு சீஃப் ஏஜென்ட் ஆக ஓபிஎஸ் இருந்தார். நாங்கள் ஒன்றாக இருந்த போது பல கோரிக்கைகளை வைத்தார். அம்மா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொன்னார். யாரை சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்கு ஆணையம் வைத்து விசாரித்தோம். விசாரணை ஆணையம் அமைக்க என்னை நிர்பந்தப்படுத்தினார். சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். அப்போது கூட மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். 2019ல் தேனியில் அவர் மகன் போட்டியிட்டதற்கு அங்கு மட்டும்தான் வேலை பார்த்தார் மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியை பற்றி கவலைப்படாமல் மகனைப் பற்றி கவலைபட்டார். ஒற்றை தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. அதன் பிறகு தான் அவர் நீதிமன்றம் சென்றார்.
ரவுடிகளை வைத்து கட்சியினரை தாக்கி தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சூறையாடி திருடி சென்றனர். தொண்டர்கள் இவரால் பலர் சிகிச்சை பெற்றனர். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கு தொடர்ந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் ஏதாவது கட்சிக்கு இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால் ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டார். அவருக்காக வாக்குகள் விழவில்லை பணத்தால் பெற்றார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார். விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீதமும் வாய்ப்பில்லை.
கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசு விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். எம் ஆர் விஜயபாஸ்கர் வழக்கு சிவில் வழக்கு, இதற்கு 100 காவல் துறை வைத்து தேடுகிறார்கள். எங்கள் மாவட்ட செயலாளர் மீது பழி சுமத்தி அவரை ஊர் முழுதும் தேடுகிறார்கள். பிராந்தி குடித்தாலும் போதை தான் கள்ளு குடித்தாலும் போதை தான் சாராயம் குடித்தாலும் போதை தான். படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். மதுவிற்கு பழக்கமானவர்கள் உடனடியாக நிறுத்த முடியாது என்பது எனக்கு வந்த தகவல் எனவே படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.