இதுவரை சிபிஐ விசாரித்து எந்த விஷயத்தில் உண்மையை கண்டுபிடித்திருக்கிறது: சீமான்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் போலீஸில் சரணடைந்தனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களும், விசிக தலைவர் திருமாவளவனும் கூறி வருகின்றனர்.

இதனிடையே, தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரிப்பதை விட, சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நம்மிடமே ஆகச்சிறந்த காவல்துறை, உளவுத்துறை, சிபிசிஐடி எல்லாம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு சிபிஐ சிபிஐனு ஏன் கத்திட்டு இருக்காங்கனு புரியல. சிபிஐயிடம் வழக்கை மாற்றுவது என்பதே ஏமாற்றுவதுதான். இதுவரைக்கும் சிபிஐ விசாரித்து எந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

என்னுடைய மண்ணின் மகன் ஆம்ஸ்ட்ராங்கின் உயிர் பற்றி சிபிஐக்கு என்ன அக்கறை இருக்கும்? அதெல்லாம் அவசியமற்றது. கொலை நடந்திருக்கிறது. குற்றம் நன்றாக தெரிகிறது. 8 பேர் சரணடைந்திருக்கிறார்கள். அவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா என்பதுதான் முதலில் தெரிய வேண்டும். அவர்கள் சரணடைந்திருக்கிறார்கள். போலீஸ் கைது செய்யல. இன்னும் அவர்களை போலீஸார் விசாரிக்கவே இல்லை. அவனை விசாரித்தால்தானே உண்மை தெரியும். இவ்வளவு பெரிய கட்சியின் தலைவர்களை கொல்லும் அளவுக்கு, உனக்கும், அவருக்கும் உள்ள பிரச்சினை என்ன என்பதெல்லாம் அவர்களை விசாரித்தால் தானே வெளியே வரும். அதனால் எடுத்ததும் சிபிஐ சிபிஐனு கத்துவது சரியல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.