தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை இரும்புக் கரம் கொண்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தொடர் படுகொலைகள் நடந்து வருகிறது. திருநெல்வேலியில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இன்றைக்கு வரைக்கு அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை தமிழக காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது ஒரு வாரத்துக்கு முன்பு அதிமுகவின் சண்முகம் கொலை செய்யப்பட்டார். நேற்று நடந்த படுகொலைக்கு திமுகவை சேர்ந்தவர் தான் கொலை செய்திருக்கிறார். தமிழக முதல்வர் காவல்துறையை தன் கையில் வைத்து இருக்கிறார். என்ன பண்றார் என்பதனை மக்கள் கேள்வியாக நாங்கள் கேட்கிறோம்.
8 பேரை இரவே நாங்கள் கைது செய்துவிட்டோம் என்று முதல்வர் சொல்கிறார். சென்னையில் நான் இருந்தேன். தமிழக காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை. 8 பேரும் அவர்களாகவே சரணடைந்தனர். இது தான் உண்மை. தப்பான செய்தியை பதிய வைக்கிறார்கள். இந்த 8 பேரில் அருள் என்கிறவர் ஆளுங்கட்சியின் பின்புலத்தை சேர்ந்தவர். நேற்று நான் அங்கு செல்லும்போதே பிஎஸ்பி கட்சியை சேர்ந்தவர்கள் என்னிடம் சொல்லிவிட்டனர். அதுமட்டும் இல்லை, கொலை நடந்த இடம் முதல்வரின் தொகுதி கொளத்தூரில் தான். இப்போது தான் கள்ளக்குறிச்சியில் 70 உயிர் போயிருக்கு. தொடர்ந்து நாம் பார்த்தோம் ஆனால் எல்லாரும் பட்டியலினத்தவர்கள் தான்.
கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அவர்களும், செல்வப்பெருந்தகையும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் சொல்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் கிடையாது. உண்மை குற்றவாளிகளை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை சொல்கிறார். அவங்க கூட்டணியில் தானே இருக்காங்க.. காங்கிரசும், திருமாவளவனும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக்கொண்டிருக்கிறது என்று ஏன் கேட்க கூடாது. அதுவும் இன்று பட்டியலினத்தவர்களுக்கு பாதுகாவலர்கள் நாங்க தான் என்று சொல்லும் திமுக ஏன் தொடர்ந்து பட்டியலின மக்களே இது போன்று இறந்துகொண்டு இருக்கிறார்கள் என்ற கேள்வியை பட்டியலின மக்கள் சார்பாக எழுப்புகிறேன்.
டாஸ்மாக் சரக்கில் `கிக்’ இல்லாததால், பொதுமக்கள் கள்ளச் சாராயத்தை நாடுவதாக சட்டப்பேரவையில் அமைச்சரே அறிவிக்கிறார். தரமில்லாத உணவு வழங்கும் உணவகத்துக்கு `சீல்’ வைக்கும்அரசு, தரமில்லாத மதுவை வழங்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் `சீல்’ வைக்க வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு, கனிமவளக் கொள்ளை, மணல் கொள்ளை அதிக அளவில் நடக்கின்றன.
தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். கனிமவளக் கொள்ளையைத் தடுக்கவும், ரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அள வுக்கு கிடைத்திடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.