செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கம் எனக்கில்லை: அண்ணாமலை!

பாஜக குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்திருந்த நிலையில், அவர் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “செல்வப்பெருந்தகை குற்றப் பின்னணி உடையவர்” என்று விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது தமிழக பாஜகவில் உள்ள குற்ற பின்னணி கொண்டவர்களின் பட்டியலை செல்வப்பெருந்தகை வெளியிட்டிருந்தார். செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “துக்க வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன் கோபத்துடன், என்னை ரெளடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கள் யாரையும் குற்றவாளிகள் என்று தெரிவிக்கவில்லை. ஆருத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேசி வருவதால், அதுகுறித்தும் விசாரிக்க கோரினோம். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை என்று ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற முன்னாள் முதல்வர்களே புகழ்ந்துள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கொண்டேவுள்ளார். குற்றப் பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளேன். அண்ணாமலை எதற்காக தீடீரென ராஜிநாமா செய்தார் என்பதை ஆராய வேண்டும். எல்லோரையும் மிரட்டிக்கொண்டு வந்த அண்ணாமலையின் எதிர்காலம் தற்போது காங்கிரஸ் கையில் இருக்கிறது. என்மீது அவதூறு பரப்பியதற்காக காவல்துறையில் புகார் கொடுக்கலாம். தமிழகத்தில் எஸ்சி ஆணையம் மிக வலிமையானதாக இருக்கிறது. அப்படி கொடுத்தால் உன்னுடைய நிலைமை என்ன ஆகும்? மகாத்மா காந்தியை சுட்டுக்கொல்லும் போது ராம், ராம் அவரை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். நாங்கள் அந்த வழியில் வந்தவர்கள். எனவே அண்ணாமலையை தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செல்வப்பெருந்தகை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் அண்ணாமலை. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e) 2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி 2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல் 2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல் 2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல் கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு. குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா?

அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.