உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் எதிரொலியாக, உள்ளூர் வாகன ஓட்டிகள் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களின் முற்றுகைக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மதுரை திருமங்கலம் வழியாக திண்டுக்கல்-கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் விதிமுறைக்கு புறம்பாக திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து கப்பலூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவில் கப்பலூர் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த கோரி தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி நிர்வாகம் தகராறு நடைபெற்று செய்து வந்தது. சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என 12 ஆண்டுகளாக உள்ளூர் வாகன ஓட்டிகள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து அவ்வப்போது கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளித்து வந்தது. கடந்த வாரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 2020 ஆம் ஆண்டு முதல் 24 வரை 4ஆண்டுகள் சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக கூறி அதற்கு சுங்க கட்டணம் பாக்கி உள்ளதாக ரூபாய் ஐம்பதாயிரம் முதல் 22 லட்சம் வரை கட்டணம் செலுத்த கோரி வாகன ஓட்டிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது எனவும், வழக்கமாக நடைமுறையில் உள்ள வாகன கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் கட்டண விலக்கு அளித்து உள்ளூர் வாகனம் ஓட்டிகள் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் 2 நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் MLA க்கள் மகேந்திரன், SS-சரவணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் சுங்கச்சாவடி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்னிட்டு திருமங்கலம் DSP அருள் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கைது செய்ய ஐந்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகர் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்லும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
தொடர்ந்து, கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பேருந்து இல்லாததால் நடந்து செல்கின்றனர். காவல் துறை சார்பில் திண்டுக்கல்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றிவிடப்பட்டது. போலீசார் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்து போராடிய அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான, திரு. ஆர். பி. உதயகுமார் அவர்களையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும், கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைதுசெய்துள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.