தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னர் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு இன்று மீண்டும் முறையீடு செய்தது. இந்த வழக்கு விவரங்களை மின் அஞ்சலில் அனுப்புமாறு பீட்டா அமைப்புக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி 2017-ம் ஆண்டு உலகம் அதிர பெரும் புரட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. சென்னை மெரினாவில் மாணவர்கள் தொடங்கிய புரட்சி தமிழ்நாட்டையும் குலுங்க வைத்தது. சென்னை மெரினா முதல் தமிழ்நாட்டு குக்கிராமங்களை வரை தமிழ் மக்களின் கடுமையான எதிர்ப்புக்குள்ளானது ஜல்லிக்கட்டுக்கு தடை காரணமான பீட்டா அமைப்பு. இந்த கிளர்ச்சியால்தான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. அப்போதும் தமிழருக்கு எதிராக நின்ற பீட்டா உச்சநீதிமன்றம் போனது. பீட்டாவின் மனுவையும் விசாரித்த உச்சநீதிமன்றமானது கடந்த ஆண்டு மே18-ந் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்தும் சட்டத்துக்கு ஜனாதிபதியே ஒப்புதல் தந்துவிட்டார்; அந்த சட்டமும் அரசியல் சாசனத்துக்குட்பட்டதுதான். அதில் தலையிட முடியாது. தமிழ்நாடு அரசின் சட்டம் முழுமையாக அமல்படுத்தியாக வேண்டும் என ஆகப் பெரும் முக்கியத்துவமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்தது.
அப்போதும் அடங்க மறுத்த பீட்டா மறுப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தந்த தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என கோரியது. அதாவது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வேறு நீதிமன்ற மொழிகளில் மனுவாக தாக்கல் செய்தது பீட்டார். இம்மனு விசாரணைக்கு வராமலேயே கிடப்பில் கிடந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் பீட்டா தரப்பு ஆஜராகி தங்களது சீராய்வு மனுவை விரைவாக நடத்த வேண்டும் என முறையிட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விவரங்களை மின் அஞ்சலில் அனுப்ப பீட்டாவுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார்.