கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மே மாதம் 13-ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.அந்த பணிகள் நிறைவு பெற்று நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், மின் உற்பத்தி தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் வால்வு பகுதியில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் பழுதை நீக்கி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.