மேற்கு வங்க மாநிலம் சோப்ராவில் பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதற்கு பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக செய்திதொடர்பாளர் சேஷாத் பூனாவாலா நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ இருந்தது. இது குறித்து பூனாவாலா கூறியிருப்பதாவது:-
சோப்ராவில் நடைபெற்ற தலிபான் ஸ்டைல் தாக்குதலுக்குப்பிறகு, மற்றொரு கொடூர தாக்குதல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.,வின் கூட்டாளி ஒருவர் இளம்பெண் ஒருவரை தனது கும்பலுடன் சேர்ந்து தாக்குகிறார்.
மேற்குவங்கத்தில் இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த குற்றவாளிகளை திரிணமூல் காங்கிரஸ் காக்கிறது. சந்தேஷ்காலி சம்பவம், சோப்ரா சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து உள்ளது.
மம்தா அரசு தற்போது பாலியல் வன்கொடுமையாளர்கள், ஊழல்வாதிகள், வெடிகுண்டு வீசுபவர்களை பாதுகாக்கிறது. பெண்கள் மேம்பாடு குறித்து பேசும் இண்டியா கூட்டணி தலைவர்கள், மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிரான நடைபெறும் வன்முறை குறித்து வாய்திறப்பதில்லை.
தற்போது தாக்கப்பட்டுள்ள பெண்ணை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் சந்தித்து, மம்தா அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பார்களா? சந்தேஷ்காலி விவகாரம், ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல், சோப்ராவில் நடை பெற்ற தாக்குதல் குறித்து இவர்கள் வாய்திறப்பதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.