பொது மக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இந்த சம்பவம் சென்னை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சட்டம் – ஒழுங்கு, போலீஸாரின் கட்டுக்குள் இல்லை, ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காவல் துறை நம்பிக்கையை இழந்துவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண்நியமிக்கப்பட்டார். இதேபோல் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையடுத்து, இருவரும் ரவுடிகள் ஒழிப்பு பணியை வேகப்படுத்தி உள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கணக்கெடுத்து அவர்களின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை காவல் ஆணையரான அருண் கடந்த 2 தினங்களாக போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக போலீஸ் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள், 48 உதவி ஆணையர்கள் போலீஸாரின் ரோந்து பணிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களும் ரோந்து பணிக்கு செல்ல வேண்டும். குறிப்பாக இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் தினமும் இரு வேளை ரோந்து செல்ல வேண்டும். போலீஸார் தங்கள் காவல் வாகனங்களில் மின் விளக்குகளை எரியவிட்டவாறு மக்கள் பார்க்கும் வகையில் ரோந்து பணி செல்ல வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி அளிப்பதோடு, சமூக விரோதிகளுக்கு அச்சம் ஏற்படும். எனவே, இதை போலீஸார் கண்டிப்புடன் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். பணியில் சுணக்கம் காட்டும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் அல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது என காவல் ஆணையர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதேபோல, தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதன்படி, புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் நேற்று பொறுப்பேற்றார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுடனும் காணொலி வாயிலாக ஏடிஜிபி டேவிட்சன் ஆலோசனை நடத்தினார். அப்போது ரவுடிகளை அடக்குவது தொடர்பாக மட்டும் 30 அதிரடி உத்தரவுகளை ஏடிஜிபி டேவிட்சன் பிறப்பித்தார்.
தமிழ்நாட்டில் A+ லிஸ்ட்டில் உள்ள 750 கொடூர ரவுடிகளின் அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்; பல பிரிவுகளில் கீழ் இருக்கும் 12 ஆயிரம் ரவுடிகளை கண்காணிக்க வேண்டும்; ரவுடிகள் மீதான நிலுவையில் இருக்கும் வழக்குகளை உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்; மிகவும் அராஜகத்தில் ஈடுபடும் ரவுடிகளின் லிஸ்ட்டை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை டேவிட்சன் பிறப்பித்துள்ளார்.
மேலும், ரவுடிகள் குறித்து வரும் OCIU அலர்ட்டுகளை கிடப்பில் போடாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடப்பில் போடும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் ஏடிஜிபி டேவிட்சன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, ரவுடிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருக்கும் போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.