குழந்தைகளிடம் அறிவியலை சொல்லிக் கொடுக்க வேண்டும்: திருமாவளவன்!

குழந்தைகளிடம் ஜாதி, ஆண்ட பரம்பரை என்றெல்லாம் சொல்லிக் கொடுக்காதீங்க.. என்றோ ஒரு காலத்தில் அவர்கள் ஆண்டார்கள்.. இன்றைக்கு நீ பிச்சை எடுக்குற.. அறிவியலை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல் திருமாவளவன் ‘செம்பியன் மாதேவி’ என்னும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜாதி, ஆண்ட பரம்பரை என்றெல்லாம் சொல்லிக் கொடுக்காதீங்க, அரச பரம்பரை என்றெல்லாம் சொல்லிக்கொடுக்காதீங்க.. அவர்கள் என்றோ ஒரு காலத்தில் ஆண்டார்கள்.. இன்றைக்கு நீ பிச்சை எடுக்குற.. அவன் கோட்டை கட்டி ஆண்டாலும், அவர்களின் பரம்பரை இன்று என்ன நிலையில் இருக்கிறது? அது நிலைக்காது என்பது தானே அதன் அர்த்தம்.. கோட்டை காட்டி ஆண்டவரின் பரம்பரை.. நான் இத்தனையாவது வழி பிள்ளை.. மறுபடியும் அதே கம்பீரத்துடன் போவேன்.. யானையில் போவேன்.. குதிரையில் போவேன்.. போக முடியுதா.. முடியாது.. இது தான் வாழ்க்கை. கோட்டை இருந்த இடம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. அதனால் அதை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் அறிவியலை சொல்லிக்கொடு என்று சொல்கிறார்கள் இந்த படத்தில்..

அறிவியல் என்பது பரிட்சைக்கு எழுதற சைன்ஸ் இல்லை.. வாழ்வியலே ஒரு அறிவியல் தான்.. அந்த அறிவியல் அடிப்படையில் தான் உயிரினங்கள் எல்லாம் வாழ்கிறது. கற்பனைகளிலும், கற்பனையான நம்பிக்கைகளிலும் சிக்கி கிடப்பதுதான் மனித குணம்.. இதுதான் வந்து கற்பிதங்களுக்குள் சிக்கி கிடக்கிற சமூகம்.. எனக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது.. நான் இந்த குடும்பத்தைச் சார்ந்தவன்.. நான் இப்படிப்பட்ட ஆளு என்ற ஈகோ.. இது எல்லாம் கற்பிதங்கள்.. சாதி என்பது கற்பிதம், மதம் என்பது ஒரு கற்பிதம், கடவுள் என்பது கற்பிதம்.. கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி வரும்.. கடவுள் உண்டா இல்லையா என்பதில் பிரச்சனை இல்லை.. நம்புறயா இல்லையா.. கடவுளை பற்றி நான் எதுவும் பேசத்தேவையில்லை..

மனிதர்களுடைய வாழ்க்கை தான் முக்கியமானது.. நான் எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.. இந்த வாழ்க்கையை எப்படி வாழ்ந்திட்டு போகனும்? அவ்வளவு தான் எனக்கு.. ஒரு அருமையான உரையாடலை 2 மணி நேர திரைப்படமாக எடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட படைப்பாளர்கள் தான் இப்போது தேவைப்படுகிறார்கள்.. என்னுடைய அரசியல் இல்லை.. சாயல் இல்லை என்று என் கருத்தை நான் திணிக்கக்கூடாது.. அவர் 24 மணி நேரமும் அரசியல் செய்கிறார்.. ஆனால் அந்த சாயல் படத்தில் இருக்காது.. அறம் என்ற ஒரு படத்தை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.. கற்பிதங்களுக்குள்ளே சிக்கி கிடக்கும் மானிடத்தை மீட்பது என்பது தான் படைப்பாளர்களின் போராட்டமாக இருக்க வேண்டும். கற்பிதங்களுக்குள்ளே சிக்கி கிடக்கும் மானிடத்தை மீட்பது என்பது தான் படைப்பாளர்களின் ஆளுமையாக இருக்க வேண்டும்.

ஆணவக் கொலை என்பது கற்பிதம்.. 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை விட, எனக்கு என் ஜாதி கௌரவம் தான் முக்கியம் என்கிறார்கள். இந்த கௌரவம் சாதி அடிப்படையிலானது. கல்வி அடிப்படையிலானது அல்ல.. அறிவு அடிப்படையிலான கௌரவம் அல்ல.. ஆற்றல் அடிப்படையிலான கௌரவம் அல்ல.. சாதி அடிப்படையிலான கௌரவம்.. செம்பியன் மாதேவி படத்துல லோகன் பத்மநாபன் எழுதிய வசனத்தில் வில்லனாக நடிப்பவர் சொல்கிறார்.. சாதியும் கௌரவமும் தான் முக்கியம் என்று சொல்லி ஹீரோவை வெட்டுகிறார். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கிறது. இது கற்பிதம்.. இது வரட்டு கௌவரம். இந்த விஷயத்தில் எப்போது தெளிவு வரும் என்றால், வாழ்க்கையை பற்றி, மனிதர்களை பற்றிய, அறிவியலை பற்றிய தெளிவு வரும் போதுதான் அது நமக்கு புலப்படும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.