சவுக்கு சங்கர் வழக்கில் விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி விலகல்!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தானாக விலகியுள்ளார்.

பிரபல யூடியூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரியளவில் சர்ச்சைக்கு உள்ளாகின. இதையடுத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கஞ்சா வைத்திருந்ததாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்டப்பட்டது. மேலும், சவுக்கு மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும், எனவே இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார். இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விலகியுள்ளார். மேலும், தான் இடம்பெறாத அமர்வு முன் மனுவை பட்டியலிடுமாறு, தலைமை நீதிபதிக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் கோப்புகளை அனுப்பியுள்ளார். எனினும் வழக்கு விசாரணையில் இருந்து அவர் விலகியதற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.