50 சதவிகித இடஒதுக்கீட்டு ரத்து அரசு மருத்துவர்களுக்கு அநீதி: எடப்பாடி பழனிசாமி!

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 30 துறைகளில் எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளன. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளான எம்டி, எம்எஸ் போன்றவற்றில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளது. இந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், எலும்பியல், மயக்கவியல், நெஞ்சக மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சமூக மருத்துவம், தடயவியல் மருத்துவம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மற்ற துறைகளில் ஒரு வருடத்திற்கு சேர முடியாது என்றும், அடுத்த கல்வியாண்டிற்கான சூழ்நிலையின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று மருத்துவத் துறை அறிவித்துள்ளது. இதற்கு மருத்துவர் சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.

மருத்துவர்கள் தங்கள் நேரம் மற்றும் உழைப்பை மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியுள்ளனர். அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய பாஜக அரசின் வேலைவாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை திமுக அரசு, எதிர்ப்பதாக கூறி கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டு உள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இது திமுக அரசின் முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது. இது மருத்துவப் பட்ட மேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆகவே, உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.