ஊழல் இருக்கும் வரை, இது போன்ற படங்கள் வரத்தான் செய்யும். நோய் இருக்கும் வரை எப்படி மருந்து இருக்கிறதோ, ஊழல் இருக்கும் வரை, இது போன்ற படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கும் என்று சீமான் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை இன்று மட்டும் திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் கமலுடம், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தினை பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் கலந்துகொண்டார். கமலுடன் படம் பார்த்த சீமான் கூறியதாவது:-
இந்தியன் படம் வெளியானது. அதன் பின்னர் ஊழல் ஒளிந்து விட்டதா என்ன? இன்னும் நூறு படங்கள் இது போன்று எடுத்தால் கூட, ஊழல் லஞ்சத்தை ஒழிக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் ஊழலுக்கு எதிராக, லஞ்சத்திற்கு எதிராக மாற வேண்டும். அதைத்தான் இந்தியன் 2 படமும் வலியுறுத்துகிறது. ஊழல் இருக்கும் வரை, இது போன்ற படங்கள் வரத்தான் செய்யும். நோய் இருக்கும் வரை எப்படி மருந்து இருக்கிறதோ, ஊழல் இருக்கும் வரை, இது போன்ற படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கும்.
எல்லோருமே ஊழல் மற்றும் லஞ்சத்தை வெறுக்கிறீர்கள். ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அப்படியானால் அந்த லஞ்சப் பணத்தை யார் கொடுக்கிறார், யார் வாங்குகிறார்; அதற்கான பதில் இங்கு இருக்கிறதா?. பிறருக்கு கிடைக்காதது, எனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வழியாகவே, ஊழல் லஞ்சம் உள்ளிட்டவை பிறக்கிறது. ஒவ்வொருவரும் சரியானால் இந்த நாடு தானாக சரியாகும். பெற்ற தாயே சரியாக இல்லாவிட்டாலும், அதைக் கேட்கக் கூடிய மகனாக இருக்கக்கூடியவன்தான் சரியானவன்; அப்படிப்பட்டவர்களாக மக்கள் மாற வேண்டும்.
திரைக்கலை அறிவியலின் அற்புதமான குழந்தை. பொழுதுபோக்கு படமாக அல்லாமல் நல்ல பொழுதாக அமையும் படம். ஒவொரு தோற்ற மாறுதலுக்கும் உடல்மொழியை மாற்றி கமல் நன்றாக நடித்துள்ளார். நமது பிரச்னையை சரிசெய்ய இறைதூதர் வரமாட்டார். நாம்தான் இறங்கி செய்ய வேண்டும். நீ உன் வீட்டை சுத்தம் செய் உலகம் மாறுமென படம் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார். நோய் தீரும்வரை மருந்து தரவேண்டும். அதனால் பல இந்தியன்கள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.