பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்: பொன்முடி!

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் குறித்த மருத்துவர் ராமதாஸின் பேச்சு சகஜமான விஷயம், அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம் என அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார் .

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி சான்றிதழை பெற்ற பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் முதலமைச்சர் தளபதி அவர்கள்தான். மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து திட்டம், நான் முதல்வன், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த தேர்தல் பொறுப்பாளர்களாக என்னையும், ஜெகத்ரட்சகன் அவர்களையும் அறிவித்து உள்ளனர். மூன்றாண்டு கால திமுக அரசின் சாதனைகளை சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்க சொன்னார்.

பணப்பட்டுவாடா செய்து திமுக வெற்றி பெற்று உள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அவரால் வேறு என்ன சொல்ல முடியும். அவர் எப்போதும் நேரத்திற்கு தகுந்தார் போல் பேசக்கூடியவர். மந்திரி பதவி கிடைக்கும் என்று திமுக உடன் வந்தார். இப்போது மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் உள்ளார். அவரோ , அன்புமணியோ கொள்கையை ஒழுங்காக பேசி உள்ளார்களா? நீட் தேர்வை ஒழிப்போம் என்று ராமதாஸ் கூறுகிறார். அதை அண்ணாமலையிடம் சொல்ல தராயாக உள்ளாரா.

டாக்டர் ஐயா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. விழுப்புரத்தில் எனது தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலைஞர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னார். ஆனால் அவர் அடிக்கடி மாற்றிக் கொள்வார், அவருக்கு கொள்கை கிடையாது. அவரது பேச்சு மிக சகஜமான விஷயம், அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.