மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியது தொடர்பாக திமுக மற்றும் நாம் தமிழர் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீமானுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறான பாடலை பாடி விமர்சனம் செய்தார். இந்த வீடியோ வெளியான நிலையில் திருச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு குளிக்க போன சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் சாட்டை துரைமுருகன் கைதுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கருணாநிதி பற்றிய அவதூறான பாடலை பத்திரிகையாளர் சந்திப்பிலும் சீமான் பாடி காண்பித்தார். அதுமட்டுமின்றி, இந்த பாடலை இப்போது நான் பாடியுள்ளேன். என்னை கைது செய்யுங்க பார்ப்போம் என திமுக அரசுக்கு சவால் விடுத்தார். இத்தகைய சூழலில் தான் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே தான் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலைதளங்களில் திமுகவினர் பதிவுகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சீமான் கைது செய்யப்பட உள்ளாரா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருமழிசை துணைக்கோள் நகரத்தில் 350 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கின்ற அனைத்து கட்சியினருக்கும் எந்தவிதமான பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை கையில் கிடைக்கின்ற ஆயுதங்களை எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எரிய முற்படுகிறார்கள். காய்ந்த மரத்தின் மீது கல் விழும்.. அவர் (சீமான்) தொடர்ந்து வாய்க்கொழுப்புடன் பேசி வருகிறார். அவரது உயரம் அவருக்கே தெரியவில்லை. கண்ணாடி கூண்டிலிருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டை, திரும்ப தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார்.
சீமான் மீது பொதுநல விரும்பிகள் புகார் கொடுத்து வருகின்றனர். சட்டப்படி சாத்திய கூறுகள் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதே பாட்டை பாடியதற்காக ஏற்கனவே சீமான் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளார். அதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்துகிறார் என்றால் அரசியல் பார்வை அவர் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தரையில் உருண்டு புரண்டாலும் சரி, தரையில் தவழ்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்க முடியாது. சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.