எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மோடியை எக்ஸ் தளத்தில் 10 கோடி பேர் பின்பற்றுகிறார்கள்.
தற்போதைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களே மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், அரசியல் தலைவகர்களும் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிரம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி வைத்துள்ளார்கள். தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் சில வினாடிகளில் லட்சக்கணக்கானோரை சென்றடைந்து விடுகிறது. இதனால் உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அரசியல் தொடங்கி சினிமா வரை இப்போது முக்கிய அப்டேட்கள் பெரும்பாலும் எக்ஸ் தளத்திலேயே கிடைத்து விடுகிறது.
குறிப்பாக எக்ஸ் தளத்தின் மூலம் கருத்துக்களை சுருக்கமாகவும் எளிதாகவும் கடத்த முடியும் என்பதால் தேர்தல் பிரசாரங்களை கூட எக்ஸ் தளத்தின் மூலம் முன்னெடுக்கிறார்கள். இந்திய பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக செயல்படக் கூடியவர். குஜராத் முதல்வராக இருந்த போது ட்விட்டரில் கணக்கு தொடங்கினார். அதாவது கடந்த 2009- ஆம் ஆண்டு ட்விட்டரில் மோடி கணக்கை தொடங்கினார். தொடர்ச்சியாக எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களை பதிவிடுவது, தனது அரசின் திட்டங்கள் குறித்து பதிவிடுவது என படு ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகிறார். இதனால் சர்வதேச அளவில் அதிகம் பின் தொடர்பவர்களை கொண்ட தலைவராக மோடி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 மில்லியனை எட்டியுள்ளது. அதாவது 10 கோடி பேர் மோடியை எக்ஸ் தளத்தில் பின்பற்றுகிறார்கள். இது தொடபாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்த துடிப்பான தளத்தில் நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விவாதங்கள், உள்ளார்ந்த கருத்துகள், மக்களின் ஆசிர்வாதம், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், விவாதங்கள் உள்ளிட்டவற்றை மதிக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு அடுத்து அதிக பாலோயர்களை கொண்ட நபராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார். ஜோ பைடனை 38.1 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள். துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதுவை 11.2 மில்லியன் பேரும், போப் பிரானிஸ்சை 18.5 மில்லியன் பேரும் பின்பறுகிறார்கள். இந்திய தலைவர்களுடன் ஒப்பிட்டால் மோடிக்கு அடுத்தபடியாக ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலை 27.5 மில்லியன் பேரும், சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவை 19.9 மில்ல்யியன் பேரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை 7.4 மில்லியன் பேரும் பின்பற்றுகிறார்கள்.. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களை விட மோடிக்கு எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்கள் உள்ளார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை எக்ஸ் தளத்தில் 64.1 மில்லியன் பேரும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரை 63.36 மில்லியன் பேரும் அமெரிக்கன் பேஸ்கட் பால் வீரர் லே ப்ரான் ஜேம்ஸ்சை 52.9 மில்லியன் பேரும் பின்பற்றுகிறார்கள்..
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மோடியை 30 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள். எக்ஸ் தளத்தில் மட்டும் இன்றி யூடியூப் தளத்திலும் மோடிக்கு 25 மில்லியன்ஸ் சப்ஸ்கிரைபர்கள் உள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் 91 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள்.