மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் வழக்கமான உற்சாகத்துடன் இன்று (ஜூலை 15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை பல்லவன் இல்லம் எதிரே ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் காமராஜர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது காமராஜர் புகழ் ஓங்குக என்று காங்கிரஸார் முழக்கமிட்டனர்.
இதையடுத்து செல்வப் பெருந்தகை செய்தியாளரிடம் பேசுகையில், “தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டிய கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை மத்திய அரசுதான் பெற்று தர வேண்டும்” என செல்வப் பெருந்தகை வலியுறுத்தினார்.