ரவுடிகள் தப்பிச்சு போகும் போது சுட்டுத்தான் பிடிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி!

என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை அடக்கவில்லை என்கிறார்கள், என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்துறீங்க என்று கேட்கிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 என்கவுண்டர்கள் நடந்திருக்கு. என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை ஒழிக்கவில்லை, ரவுடிகளை அடக்கவில்லை என்று கேட்கிறார்கள். என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்துருக்கு என்று கேட்கிறார்கள். இரண்டு பதில்களையும் நீங்களே தான் சொல்கிறீங்க.. அவங்க தப்பிச்சு போகும் போது என்ன செய்ய முடியும். சுட்டுத்தான் பிடிக்க முடியும். ரவுடிகள் இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “எதிர்க்கட்சிக்காரர்களுக்கு புதுமையான சந்தேகங்கள் எல்லாம் வரும். ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். எப்படி இந்த சம்பவம் நடந்திருக்கு என்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தப்பி ஓடும் போது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். அவ்வளவு தான். இதில் திமுகவுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்று எப்படி சொல்லுவீங்க.. அவர் ஜோசியம் பார்த்துட்டு சொன்னார் என்றால் சொல்லட்டும். யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை சொன்னால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நாங்க தயாராக இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அவர் மீது விசாரணை நடத்த தயாராக இருக்கிறார்.

மாயாவதி கட்சி ஒன்றும் எங்களுக்கு எதிர்க்கட்சி கிடையாது. எங்களுக்கு வேண்டிய கட்சி தான். ஆம்ஸ்ட்ராங்கும் எங்களுக்கு எதிரி கிடையாது. தோழமை தான். வேண்டியவர் தான். எனவே அவரது கொலை வழக்கில் அடையாளம் தெரிந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதில் வேறு ஏதேனும் சதிச்செயல் இருக்கிறது என்றால் புலனாய்வு விசாரணையில் தான் தெரியவரும். எங்களை பொறுத்தவரை இப்போது உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.