சிறுமிகளை பலாத்காரம் செய்த 15 பேருக்கு 40 ஆண்டுகள் சிறை!

திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 15 பேருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தென் நெற்குணத்தில் 15 பேர் கொண்ட கும்பல், இரண்டு சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதில் ஒரு சிறுமி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் 2019-ல் நடந்தது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தீனா அஜீத்குமார், பிரபா, ரவிக்குமார், அருண், மகேஷ், துரைராஜ், சந்திரமோகன், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வ சேகர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பேர் மீதும் போக்சோ சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே 5 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம், அனைவருக்கும் அதிரடி தண்டனை வழங்கி உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும், 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுமியின் சார்பில் 15 பேருக்கும் தலா 20 , 20 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீட்டு தொகையுடன், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையும் சேர்த்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, 15 பேரும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேன்டியிருக்கும்.