அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வர் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், அதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. அதில் தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என்றும், வினாடிக்கு 8000 கன அடிதான் தண்ணீர் திறக்க முடியும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை மதிக்காத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி பிரச்னை 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணையமும் செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்பதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பின்தங்கி வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கர்நாடகா மிகப்பெரிய சட்ட நெருக்கடிக்கு ஆளாகும் என அம்மாநில அனைத்து கட்சி கூட்டமே ஒப்புக்கொண்டு தண்ணீரை திறப்பதற்கு அனுமதி அளித்து இருக்கிறது. தமிழக அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் மட்டும் பங்கேற்பது என்று முடிவு எடுத்துள்ளது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக அமையும்.

அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டம் என்பது ஏற்கத்தக்கதல்ல. இதனை உடனடியாக மறுபரிசீலினை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் இடம்பெறாத அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து காவிரிக்காக துணிவோடு, நடுநிலையோடு போராடி வருகிறோம். தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற முடிவு காவிரி நலனுக்கு எதிரானதாக அமையும் என எச்சரிக்கிறோம். தமிழ்நாட்டின் காவிரி உரிமையில் விவசாயிகளின் பங்களிப்பை அபகரிக்க நினைக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.