தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? அடுக்குமாடி குடியிருப்பு முதல் ஏழை எளிய மக்கள் வரை வாக்களித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் பரிசா இந்த மின் கட்டண உயர்வு.
சொன்னதை செய்யாமல், சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல். விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் திராவிட மாடல். ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.