மோடி பிரதமராக பதவியேற்ற மே 27-ந் தேதியை கறுப்புச் சட்டை அணிந்த அனைத்து பெரியார் இயக்கங்களும் இனி துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி வலியுறுத்தினார்.
நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் சைக்கிள் பயண பிரசார நிறைவுப் பொதுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:-
நாம் நீட் தேர்வே மோசடி என்கிறோம். வடக்கே நீட் தேர்வுக்குள் நடந்த மோசடி பற்றி பேசுகிறார்கள். நீட்டைப் பற்றி பேசினால், ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசினால், பொருளாதார இடஒதுக்கீடு தவறு என பேசினால், சமூக நீதியைப் பேசினால், விஸ்வகர்மாவைப் பேசினால், மதவாதம் பற்றி பேசினால் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிற ஒரே ஆயுதம் அவசர நிலை பிரகடனம் கறுப்பு தினம் என்பதுதான். இனிமேல் திராவிடர் கழகம், பெரியாரைக் கொண்டாடுகிற அனைத்து இயக்கங்களும் அம்பேத்கரைக் கொண்டாடுகிற அனைத்து இயக்கங்களும் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுகிற அனைத்து இயக்கங்களும் ஜூன் 25 அவர்கள் கறுப்பு நாள் என்று சொன்னால் மே 27-ல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டாரே மோடி, அந்த நாளை துக்க நாளாக இனிமேல் அனுசரிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் கேட்டால் பதில் இல்லை. சென்ற நாடாளுமன்றத்திலேயே நீட் தேர்வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எத்தனை என கேட்டேன். ஆனால் மத்திய அரசோ அதுபற்றி கணக்கெடுக்கவில்லை என சொன்னது. ஐஐடிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என நாடாளுமன்ற நிலைக்குழுவில் கேட்டேன். அதேபோல பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு பெற்ற முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஏன் தற்கொலை செய்யவில்லை என கேட்டேன்? அதற்கு ஐஐடி தலைவர்களிடம் பதில் இல்லை.
அவசர நிலை பிரகடனம் என்பது தனிமனிதர்களுக்கு எதிராக, இயக்கங்கள்- கட்சிகளுக்கு எதிரான கொடுமையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஜக அரசு செய்வது அரசியல் சாசனத்துக்கு எதிரான கொடுமை; இந்தியாவுக்கே எதிரான கொடுமை. அதனால்தான் நாடாளுமன்றத்தில், குற்றச்சாட்டுகளுக்கு பதிலே சொல்லாத ‘முதுகெலும்பு’ இல்லாத பிரதமர் மோடி என்றேன். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.