டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று அவர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரையும் தமிழக ஆளுநர் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டிருந்தார். அதன்பின்னர், தற்போது முதன்முறையாக பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் சந்தித்து இருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தமிழக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர். அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில், தமிழக ஆளுநர் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.