திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 22-ம் தேதி அமமுக ஆர்ப்பாட்டம்!

திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 22-ம் தேதி அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக அமமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திமுக அரசு தமிழக மக்களின் மீது எண்ணற்ற சுமைகளை ஏற்றி வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல், ஆட்சிக்கு வந்ததிலிருந்து 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், பால் மற்றும் பால் பொருட்களின் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலை, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு, முத்திரைத்தாள் கட்டணம், சாலை வரி போன்றவற்றை உயர்த்தி ஏழை, எளிய மக்களின் மீது சுமைகளை ஏற்றியுள்ளது.

இதுதவிர போதைப் பொருட்கள் புழக்கம், கொலை, கொள்ளை தொடர்ந்து நடைபெறுகின்றன. திமுக அரசின் இந்த மக்கள் விரோத போக்கைக்கண்டித்து வரும் 22-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அமமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவிதினகரன் தலைமை தாங்கிப் பேசுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.