75 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம்: டிடிவி தினகரன்

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்படுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவிகிதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 75 சதவிகிதமும், குரூப் சி, குரூப் டி பணிகளில் 100 சதவிகிதமும் கன்னடர்களுக்கே ஒதுக்குவது குறித்து சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழக தொழில் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மசோதா கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதனைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுக அளித்த தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அமைக்கப்படும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி உள்ளூர் தொழிற்சாலைகளிலும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க இது போன்ற சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, “தமிழகத்தில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கு உள்ளது. ஆனால், அதனை செயல்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப்பெரிய துரோகமாகும்” என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், “தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழகத் தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக சட்டம் இயற்ற முன்வர வேண்டும்” என்றும் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.