விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் 40 ஆயிரம் வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளது எனவும், இந்த இடைத்தேர்தலில் இருந்து நான் பல பாடங்களை கற்றுள்ளேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டுள்ளனர். கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய வேட்பாளர் அன்புமணி வெற்றிபெற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது என்பது கூட தெரியாதவர் தான் இந்த விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் மதுவிலக்கை கொண்டு வந்தவர் மோடி. இந்த தேர்தலில் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை, திமுக கொடுத்த பணத்திற்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும். பாமக பெற்ற வாக்குகள் தான் உண்மையான வாக்குகள். பாமகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பாமகவின் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு வாக்காளருக்கும் பத்தாயிரம் கிடைத்தது. கொடுத்த பணத்தை சில பொருக்கிகள் திருப்பி கேட்கிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதி, விழுப்புரம் மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம். வேலை, வாய்ப்பு, தொழிற்சாலை இல்லாத மாவட்டம். ஆனால் மதுவிற்பனையில் விழுப்புரம் மாவட்டம் முதல் மாவட்டமாக உள்ளது. கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் மாவட்டம். பாமக நேர்மையான வாக்குகள் பெற்றுள்ளது. பாமக பெற்ற வாக்குகள் எதிர் வரும் தேர்தலுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது. திமுகவை சேர்ந்த 34 அமைச்சர்கள், 100 சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் தங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி பெற்ற வாக்குகளை விட பாமக இந்த தேர்தலில் அதிகம் பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு 66 ஆயிரம் வாக்குகள் பெற்றது. இந்த வாக்குகள் என்ன ஆயிற்று?. திமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்தார். இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களிக்கம்மாட்டார்கள் ஆனாலும் 40ஆயிரம் அதிமுக வாக்குகள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.
மின் கட்டனம் 4.83 விழுக்காடு உயர்ந்துள்ளது. நான்கு முறை மின்கட்டனம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக எதிர் கட்சியாக இருந்தபோது மின் கட்டனம் ஸ்டாலினுக்கு ஷாக் அடித்தது இப்போது ஷாக் அடிக்கவில்லையா?. 31ஆயிரத்து 500 கோடி ஆளவுக்கு மின் கட்டனம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மின் கட்டன உயர்வால் ஆண்டுக்கு ஆராயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் தொடர்ந்து மின்வாரியம் நட்டத்தில் நடப்பதாக கூறி வருகின்றனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பிறகு உச்சநீதிமன்றம் செல்வோம் என கூறி சென்றுவிட்டார்கள். தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் ஆனால் அதைக்கூட தர மறுக்கிறார்கள். 8ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தர முடியும் என கூறிவிட்டார்கள். தற்போது கர்நாடாகவில் மழை பெய்வதால் உபரி தண்ணீர் வர தொடங்கியுள்ளது. ஆனால் தண்ணீர் தேவைப்படும்போது தருவதில்லை. குருவை சாகுபடி 50 சதவீதம் பொய்த்துவிட்டது.
இந்த தேர்தலில் இருந்து நானும் பல பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன். திமுக ஆட்சி ஒன்றரை ஆண்டுகள் தான் அதன் பிறகு பாமக ஆட்சிதான். மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். மக்கள் மனநிலையை மாற்ற வேண்டும். வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலுக்காக இப்போதே யார் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்து பணியை தொடங்க வேண்டும். வருகின்ற 19ஆம் தேதி சென்னையில் மின் கட்டன உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். நிர்வாக திறமையின்மை காரணத்தால் மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அடுத்தபடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல போராட்டங்கள் நடத்தவுள்ளோம். 69 சதவீத இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் ஆபத்து உள்ளது. அந்த ஆபத்து நீங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் திமுக என்ற கட்சியே இருக்காது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் மறுக்கிறார். எனவே சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.