காவிரி நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழக அரசின் முடிவு காலம் தாழ்ந்தது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஜூலை 12 – 31 வரை தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. ஆனால், இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த கர்நாடகா, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது. அதில், தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க இயலாது, வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறக்கிறோம் என்று அறிவித்தது. கர்நாடகாவில் பெருமழை பெய்து அணைகளில் தண்ணீர் நிரம்பிய நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதுதொடர்பாக முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் சட்டநடவடிக்கையின் மூலம் காவிரி நீரைப் பெற வேண்டும். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீரைப் பெற்றோம் என்று தெரிவிக்கும் தமிழக அரசு, தேர்தல் நேரத்தில் கர்நாடகாவிற்கு சென்றது தேவையென்றால், காவிரி நீருக்காகவும் கர்நாடக அரசிடம் நேரடியாக சென்று முறையிட்டிருக்க வேண்டும்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்ததை இன்று வரை கண்டும் காணாமல் வெற்று அறிக்கையாக வெளியிட்டு, இப்போது கண்டனம் தெரிவித்துள்ளது. காலம் கடந்து தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றம் சென்று காவிரி நீரைப் பெற முயற்சிக்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் காலத்தே கிடைக்காத போது, அமைச்சரவைக் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி காவிரி நீரைப் பெற்றிருக்க வேண்டும்.
கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கு காவிரி நீரைப் பெற தவறியது தமிழக அரசு. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி பொய்த்தது. குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பிறகு மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல இருக்கும் தமிழக அரசின் முடிவு காலம் தாழ்ந்தது. ஆகவே, தமிழக அரசு காவிரி நீர் விவகாரம் தொடர்பாக காலம் தாழ்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக உடனடி நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து தமிழக உரிமையை நிலைநாட்டி, விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.