விருதுநகரில் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு!

விருதுநகர் லோக்சபா தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

விருதுநகர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான டஃப் கொடுத்தார் விஜய பிரபாகரன். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதுகுறித்து சென்னையில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது. அது போல் நள்ளிரவில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சி! விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் விளக்கமளிக்கையில், வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் இருந்தனர். உணவு இடைவேளையின் போது முறைகேடு நடந்ததாக சொல்கிறார்களே இதை அப்போதே கேட்டிருக்கலாமே! அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுதானே இரவு 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு புறப்பட்டனர். சின்ன பசங்க விளையாட்டில் அம்மாவிடம் புகார் கூறி அவர் பஞ்சாயத்துக்கு வருவது போல் விஜய பிரபாகரன் செய்துள்ளார். தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அவர்கள் இது போல் என் மீது பழி போடுகிறார்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திரு்நதார்.

இந்த நிலையில் இந்த முறைகேடு குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கும் இமெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், வழக்கு தாக்கல் செய்ய ஒரு மாதத்திற்கு மேல் கால தாமதம் ஆனதற்கு எங்கள் தரப்பில் எதுவும் இல்லை. சில நடைமுறைகளை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியிருந்ததால் தாமதமானது. தபால் வாக்குகளைத்தான் முதலில் எண்ணுவார்கள். ஆனால் விருதுநகர் தொகுதியில் மட்டும் நள்ளிரவில் எண்ணப்பட்டது. உணவு இடைவேளையானது ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்தது. உணவு இடைவேளையின் போது 13 ஆவது சுற்று இருந்தது. ஆனால் உணவு இடைவேளைக்கு பிறகு 18 ஆவது சுற்றை அறிவிக்கிறார்கள். அப்படியென்றால் 13க்கு பிறகான சுற்றுகளை எப்போது எண்ணினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.