என் உயிருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது: ஜான் பாண்டியன்!

தமிழகத்தில் பெயர் சொல்வதற்காக அரசியல் தலைவர்களை கொலை செய்யும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனது உயிருக்கும், சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது கொலையாளிகளின் எண்ணம் பெரிய தலைவர்களை கொலை செய்து விட்டு பெயர் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். இதைத் தவிர வேறு எண்ணம் அவர்களுக்கு கிடையாது. இந்த நிலை தான் தற்போது தமிழகத்தில் அதிகமாக நிலவுகிறது. இவரை கொலை செய்து விட்டோம் என பெயர் வாங்கி விட வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தோடு சிலர் தமிழகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கண்காணித்து தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு மிரட்டல் இருப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறேன். தற்போதும் புகார் அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன். உளவுத் துறை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. அவர்கள் தான் அதனை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் எனது உயிருக்கும் தற்போது ஆபத்து இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். வேலை வாய்ப்பு இல்லாததும், கஞ்சாவும் தான் கூலிப் படைக்கு காரணமாக இருக்கிறது. எனவே இந்த விவகாரங்களிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.