மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அன்புமணி தலைமையில் போராட்டம்!

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நடக்கும் இந்த போராட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கையில் பதாகை ஏந்தி நேரடியாக பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் என்பது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு என்பது ஜுலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மாதத்தில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்தும்போது கூடுதல் தொகையை வழங்க வேண்டி இருக்கும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் ரூ.27 வரை மின்கட்டணம் என்பது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி 400 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கான கட்டணம் ரூ.4.60ல் இருந்து 20 பைசா உயர்ந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 401 – 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 501 முதல் 1000க்கு மேலாக பயன்படுத்துவோரின் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டணத்தை பொறுத்தவரை ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.27 வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வுக்கு பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மின்கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். அந்த வகையில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் ஜுலை 19 ம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தின் அருகே பாமக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பதாகை வைத்து அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அவர் வைத்திருந்த பாதாகையில் ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? என்ற வாசம் இடம்பெற்றிருந்தது. மேலும் போராட்டத்தின்போது அவர்கள் மின்கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக கூறிய மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியது.