பில்கிஸ் பானு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய 2 பேரின் மனு தள்ளுபடி!

2002 குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினரை கொன்ற வழக்கில் 11 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைக்கால ஜாமீன் கோரிய 2 பேரின் மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் ஏரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இந்த வேளையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தது. மேலும் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 வயது குழந்தையும் அடங்கும். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டள்ளது. இவர்கள் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் நன்னடத்தை அடிப்படையில் கடந்த 2002 ஆகஸ்ட் 15ம் தேதி அவர்கள் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களை பாஜகவை சேர்ந்தவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களின் விடுதலையை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்கள் 11 பேரும் குற்றவாளிகள். அவர்களை விடுதலை செய்தது செல்லாது என அறிவித்தது. இந்த உத்தரவு கடந்த 2023 ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்டது. மேலும் 11 பேரையும் சிறையில் சரணடைய வேண்டும்என்று கூறியது. இதையடுத்து 11 பேரும் சிறையில் சரணடைந்தனர். தற்போது 11 பேரும் சிறையில் தான் உள்ளனர்.

இந்நிலையில் தான் பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, ரமேஷ் ரூபாபாய் சந்தனா, ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜூபாய் பாபுலால் சோனி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு என்பது நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் தங்களின் மறு ஆய்வு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜூ பாய் பாபுலால் சோனி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‛‛உங்களின் அடிப்படை உரிமை எங்கு பாதிக்கப்பட்டுள்ளது? ஏன் அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் தாக்கல் செய்துள்ளீர்கள்? இந்த மனுவை அந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்ய உகந்தது தானா?” என கேள்வி எழுப்பினார். அதன்பிறகு அவர்கள் 2 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் 2 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது என்பது உறுதியாகி உள்ளது.