கோவில் நகரான மதுரை கொலை நகராகியுள்ளது: ஆர்பி உதயகுமார்!

மதுரையில் இரண்டு வாரங்களில் 11 கொலைகள் நடைபெற்று உள்ளது எனவும், கோயில் மாநகராக இருந்த மதுரை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

SAY NO TO DRUGS – SAY NO TO DMK என்ற தலைப்பில் திமுக ஆட்சி நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் குறித்தும், RESIGN STALIN என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயம் குறித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கருமத்தூரில் நடைபெற்றது. அதில் தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், கள்ளச்சாராயம் அருந்தி உயிர்பலி, சட்ட ஒழுங்கு சீர்கேடு இவற்றை கண்டித்து ஸ்டாலினை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் மதுரையில் 11 படுகொலைகள் நடைபெற்றது. இதை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும். தற்போது நடை பயிற்சி மேற்கொள்ளுவர்களுக்கு கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தனியாக சொல்பவர்கள் மீது குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். பள்ளி மாணவர்கள் பணத்திற்காக கடத்தப்படுகிறார்கள். மதுரையில் நடைபெறும் சமூக விரோத செயலுக்கு இதுவரைக்கும் காவல்துறை துப்பு துலக்கவில்லை. கோயில் மாநகராக இருந்த மதுரை சமூக விரோதிகளின் கூ.டாரகமாக மாறிவிட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராக இருந்த பொழுது காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட விட்டார்கள். அதன் மூலம் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகராக இருந்தனர். இன்றைக்கு அதே காவல்துறை தலைகுனிந்து நிற்கிறது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணங்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் பலியானார்கள். அப்போது முதலமைச்சராக ஸ்டாலின் இனி இதுபோல் நடக்காது என்று உறுதியளித்தார். தற்போது விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் மரணம் அடைந்தனர். இது குறித்து எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விதி எண் 55 படி பேச முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விதி எண் 56 படியும் பேச முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் கருத்துக்களை சட்டசபையில் பதிவு செய்ய விடாமல் ஜனநாயக படுகொலை செய்துள்ளார்கள். இதை கண்டித்து தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தோம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உள்துறை மானிய கோரிக்கையில் எடப்பாடி இரண்டரை மணி நேரம் தமிழகத்தில் நடைபெறும் கள்ளசாரயம், போதை நடமாட்டம்,சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து பேசினார். ஸ்டாலின் இதைக் கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் சாவு நடந்திருக்காது. ஸ்டாலின் கேட்கும் மனநிலையில் இல்லை. ஏனென்றால் 40 தொகுதியில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் உள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. குறிப்பாக மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த அழுத்தம் கொடுத்தபோது மக்கள் நலம்தான் முக்கியம் என்று மின்சாரத்தை கட்டணத்தை எடப்பாடியார் உயர்த்தவில்லை. 2011 ஆண்டில் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது தமிழகம் இருளில் மூழ்கி இருந்தது. அதன்பின் ஜெயலலிதா மின் மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கினார். தற்போது திமுக ஆட்சியில் தற்பொழுது மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மேலும் மின் சேவைக் கட்டணத்தையும் உயர்த்தி விட்டனர். தொழிற்சாலைகளுக்கு மின் கட்டனத்தை உயர்த்தி விட்டனர். இதனால் விலைவாசி உயர்ந்து அந்த சுமை மக்கள் மீதுதான் விழும். அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம், கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி விட்டார்கள். இன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 40 வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் முதலமைச்சர் உள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு சரியான பாடத்தை புகட்டி மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வருவதற்கு மக்களாகிய நீங்கள் நல்ஒத்துழைப்பை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.