ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் அடிப்படுவது சாதாரண விஷயம் அல்ல. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று அன்புமணி கூறினார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி இரவு ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் தலைவர் என்பதால் இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கட்சியின் தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனிடையே, இந்த சம்பவத்தில் 11 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்கிற ரவுடி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகி அஞ்சலை என்பவரின் பெயர் அடிபட்டது. சென்னையில் பிரபல பெண் தாதாவான அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். இதையடுத்து, பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுக, அதிமுக பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
இதற்குதான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். ஏனென்றால் இதில் பல கட்சிகள், பல அதிகாரிகள், பல மாவட்டங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எனவே, செல்வாக்கு மிக்க நபர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரணை செய்யாமல் இதில் உண்மை வெளிவராது. இதுபோன்ற கொலைகளையும், குற்றங்களையும் தடுக்க வேண்டுமென்றால் சிபிஐ விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
இதை பத்தோடு பதினொன்றாக நாம் கடந்து போய்விட முடியாது. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரின் கொலையில் பல அரசியல் கட்சிகளின் பெயர் அடிபடுவது சாதாரண விஷயம் அல்ல. அவர்களை தப்பிக்க விட்டால் எதிர்காலத்திலும் இதுபோன்ற பயங்கரங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.