இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக தேசியத் தேர்வு முகமை நடத்திய நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 744 மாணவர்கள் கூடுதலாக நீட் நுழைவுத் தேர்வு எழுதியிருப்பது எப்படி சாத்தியமாகும்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டன. நீட் நுழைவுத் தேர்வு நடந்த போதே ஆள் மாறாட்டம், வினாத்தாள் விற்பனை மோசடி உள்ளிட்டவை வெளிச்சத்துக்கு வந்தன. இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் நீட் தேர்வு நடத்திய தேசியத் தேர்வு முகமையே சில ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
இதனையடுத்து நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
இதனிடையே தேசியத் தேர்வு முகமை தலைவர் நீக்கப்பட்டார். நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளின் முறைகேடுகளைத் தடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. மேலும் நீட் முறைகேடு வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நீட் முறைகேடுகள் வழக்குகளில் இன்று வரை கைது நடவடிக்கைகள் தொடருகின்றன. மேலும் நீட் முறைகேடு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றமும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. அத்துடன் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1,58,449. இதில் நீட் நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் எண்ணிக்கை 1,52,920. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை 89,426. ஆனால் தேசியத் தேர்வு முகமை நேற்று வெளியிட்ட நீட் தேர்வு முடிவுகளானது தமிழ்நாட்டில் மொத்தம் 1,53,664 பேர் தேர்வு எழுதியதாக தெரிவிக்கிறது. மேலும் சேலம், வேலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களின் சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் முழுமையான மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 1,52,920 மாணவர்கள்தான் நீட் தேர்வை எழுதியவர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நீட் ரிசல்ட்டில் மட்டும் 744 மாணவர்கள் எப்படி கூடுதலாக இடம் பெற்றனர்? என்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிற மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் கூட, 744 மாணவர்கள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதுதான் அதிர்ச்சிக்குரியது என்கின்றனர் கல்வியாளர்கள். நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான குழப்பங்கள் ஒருநாளும் ஓய்ந்ததாகவும் தெரியவில்லை. ஓயப்போவதாகவும் தெரியவில்லை. இதனால் தான் நாடு முழுவதும் நீட் எதிர்ப்புக் குரல்கள் வலுவடைந்து கொண்டே இருக்கின்றன.