அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த 15ஆம் தேதி அன்று அறிவிப்பு வெளியானது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், ஏழை மக்களை சிரமப்படுத்தும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் மின் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட அக்கட்சியினர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அன்புமணி, பாமக நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி என்றும், இத்தகைய பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது எனவும் தெரிவித்தார். அத்துடன், காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அறிவித்தார்.
இந்த சூழலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 3வது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அன்புமணி ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.