அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேரலாமா: சு. வெங்கடேசன் கண்டனம்!

மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக ஆர்எஸ்எஸ்-இன் செயல்பாடுகள் புத்துயிர் பெற்றன. அதுமட்டுமல்லாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா சித்தாந்தத்தை தான் பாஜக அரசு செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. முத்தலாக் தடை, சிஏஏ சட்டம், காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் என பாஜக அரசு கொண்டு வந்தவை எல்லாம் ஆர்எஸ்எஸ்ஸின் உத்தரவின் பேரில்தான் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் யாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டளையின் பேரில்தான் நடக்கிறது என அவை விமர்சித்து வருகின்றன.

ஆனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் அதை திட்டவட்டமாக மறுத்து வருகின்றன. தாங்கள் தனி அமைப்பு என்றும், பாஜக அரசின் செயல்பாடுகளில் தாங்கள் தலையிடுவதில்லை என ஆர்எஸ்எஸ் தெரிவிக்கிறது. அதே சமயத்தில், பாஜகவோ, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால், பாஜகவிலும், மத்திய அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் யார் யார் வர வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் தான் தீர்மானிக்கிறது என்ற ஒரு பேச்சும் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் கலந்து கொள்ள மத்திய அரசு பணியாளர்கள் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பரவி பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்பலைகளையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்க்கரின் பிறந்தநாளன்று புதிய நாடாளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுப்பி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி துவங்கியுள்ளார். இந்த செயலை செய்த மோடி அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.