உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 வெற்றியை அடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்றே இதற்கு உதயநிதி மழுப்பலான பதிலை தெரிவித்தார்.
அதே சமயம் சீனியர் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனும், துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருக்க திமுகவில் 2026 தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அதன் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கே இடம் இல்லை. இதுகுறித்து துரைமுருகன் தானும் திமுகவில் உறுப்பினராகத்தான் இருக்கிறேன் என வாட்ஸ் ஆப் வாயிலாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தரப்பட உள்ளதாக தகவல் பரவுகிறதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, “இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில் அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் அவரிடம்தான் உள்ளது. யாரை மாற்ற வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய முடியும்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, “அது எப்படி வரவேற்க முடியும்.. திமுகவில் எத்தனை சீனியர் அமைச்சர்கள் இருக்கிறார்கள். எத்தனை அனுபவம் வாய்ந்த, திமுகவுக்காக உழைத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி தரவில்லை.
கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலின் மகன் என்பதற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுக்கலாமா? ஆக திமுக என்பது குடும்ப கட்சியாகவும், குடும்ப ஆட்சியாகவும் மாறிவிட்டது” என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.