மத்திய பட்ஜெட் நல்ல பட்ஜெட். நாட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்கான முன்னெடுத்து செல்லும் பட்ஜெட் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் தேனி மாவட்ட ஆதராவளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இது ஒரு நல்ல பட்ஜெட். 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி ஆட்சியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட். இந்த பட்ஜெட் இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளில் அடைகின்ற இலக்கினை நாம் 5 ஆண்டுகளிலே அடைந்துவிடுவோம். இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் ஆந்திரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், “சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது காரணங்களில் அடிப்படையில் தான் ஒதுக்கப்படுகின்றது. இதில் கூட்டணி அரசியல் காரணம் கிடையாது” என்றார்.
இதேபோன்று பிகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், “அங்கு பாதிப்புக்கு ஏற்ற அரசாணையின் படியே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாட்டினையும் பார்ப்பதில்லை” என்று கூறினார்.