பலமுறை அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வருவது கவலையளிக்கிறது. உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து செந்தில் பாலாஜியின் உடல்நலம் காக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயனண் திருப்பதி கூறியுள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன் தினம் மதியம் செந்தில் பாலாஜிக்கு திடீரென மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இதயவியல் துறை மருத்துவர்கள் சோதனை நடத்தினர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமணையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்துவதாக பாஜகவின் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி ஏற்பட்டு முதலில் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியூட்டி கூடிய வருத்தத்தையும், வியப்பையும் அளிக்கிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 22) முதன்மை நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு நேரில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பலமுறை நம் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் தொடர்ந்து செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி வருவது கவலையளிக்கிறது.
அதனால் தமிழக முதல்வர் அவர் மீது கருணை கொண்டு உடனடியாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து செந்தில் பாலாஜியின் உடல்நலம் காக்க வேண்டும். ஒரு வேளை, அவ்வளவு தூரம் பயணிக்க முடியாதென்றால், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலாவது அவரை அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் அவரின் ‘சேவை’ இந்த நாட்டிற்கு ‘தேவை’ என்பதை முதல்வர் புரிந்து கொண்டு அவரை கனிவோடு எய்ம்ஸ் மருத்துவமணையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.